Breaking News

இனி ஆடு, மாடுகள் ஏப்பம் விட்டாலும் வரி; நியூசிலாந்து அரசின் புதிய திட்டம் - காரணம் இதுதான்...!!

இனி ஆடு, மாடுகள் ஏப்பம் விட்டாலும் வரி; நியூசிலாந்து அரசின் புதிய திட்டம் - காரணம் இதுதான்...!!

பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த தனித்துவமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது நியூசிலாந்து அரசு.

அதன்படி ஆடு, மாடுகள் உள்ளிட்ட பண்ணை விலங்குகள் ஏப்பம் விடுவதற்கும், சிறுநீர் கழித்தல் உள்ளிட்டவற்றுக்கும் தனியாக வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விவாதம் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே நடந்து வந்த நிலையில் தற்போது இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. என்னங்க இது ஆடு, மாடுகள் ஏப்பம் விடுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கு கூட வரியா என விவசாயிகள் தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அதன்படி பர்ப்பிங் என்ற பெயரில் ஆடு மாடுகளுக்கான ஏப்பத்துக்கு வரியும், பீயிங் என்ற பெயரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சிறுநீர் கழிப்பதற்கும் வரி விதிக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான வரைவு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் ஏப்பம், சிறுநீர் கழித்தலுக்கான வரி எவ்வளவு என்பது இன்னும் குறிப்பிடப்படாத நிலையில் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் 2025ல் வரி செலுத்த தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

அரசு இப்படி ஒரு வரி திட்டத்தை உருவாக்க காரணம் என்னவென்றால் பொதுவாக ஆடு, மாடுகள் ஏப்பம் விடும்போது அதன் வாயில் இருந்து மீத்தேன் வாயு வெளியேறுகிறது. மீத்தேன் என்பது கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். இதனால் தான் மீத்தேன் வெளியேற்றத்தை குறைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதேபோல் சிறுநீரில் இருந்து நைட்ரஸ் ஆக்சைடு வெளியேறுகிறது.

இவை இரண்டும் பூமி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான பசுமை இல்ல வாயுக்களாகும். இதனால் தான் மாடு உள்ளிட்ட பண்ணை விலங்குகளின் பர்ப்ஸ் மற்றும் சிறுநீர் கழித்தலுக்கு வரி விதிப்பதற்கான வரைவு மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது.

இந்த திட்டம் உண்மையில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை குறைக்க உதவும் என கூறப்படுகிறது.

இருப்பினும் வெறும் 50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகளும், 26 மில்லியன் செம்மறி ஆடுகளும் உள்ளன.

இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் மூலம் கிடைக்கும் பொருட்களின் பொருளாதாரத்தை தான் நியூசிலாந்து சார்ந்துள்ளது.

இந்த சூழலில் ஆடு மாடுகளின் ஏப்பத்துக்கு வரி விதிப்பது என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.

அதாவது வரிக்கு பயந்து விவசாயிகள் கால்நடை வளர்ப்பை கைவிடும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் அதிகமாக பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆனாலும் நியூசிலாந்தில் பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.