Breaking News

அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து பொலிஸாரை விடுவிப்பதற்கு புதிய சட்டமூலம் - சரத்வீரசேகர

அடிப்படை உரிமை மீறல்  குற்றச்சாட்டுகளில் இருந்து பொலிஸாரை  விடுவிப்பதற்கு புதிய சட்டமூலம் - சரத்வீரசேகர

காவல்துறையினருக்கு எதிராக சுமத்தப்பட்ட அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான புதிய  சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்ய முடியாவிட்டால்- காவல்துறையினரை அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்ய அனுமதிக்கும் சட்டமூலம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள்  அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் காவல்துறையினரை காப்பாற்றும் நோக்கத்துடனும் புதிய சட்டமூலத்தை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தங்கள் கடமைகளை உரியைவிதத்தில் நேர்மையாக செய்தவேளைகளில் பொதுமக்கள் அவர்களிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் 35 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு பதவி உயர்வு வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை ஆறுமாதங்களிற்குள் பூர்த்தி செய்யமுடியாவிட்டால் அவர்களை குற்றச்சாட்டுகளி;ல் இருந்து விடுதலை செய்வதற்கான சட்டமூலம் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.