Breaking News

“பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம்” - எடப்பாடி பழனிசாமி...!!

“பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம்” - எடப்பாடி பழனிசாமி...!!

இந்தியா: தமிழ்நாடு

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிச்சாமி கூறுகையில் ”மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் முன்னர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். திமுக மாதிரி நாங்கள் அல்ல. அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும் கட்சி. கூட்டணியில் இருக்கும் போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம். கூட்டணிக் கட்சிகளை விமர்சனம் செய்வது திமுகவுக்கு கைவந்த கலை. கூட்டணி கட்சியினருக்கு அதிமுக என்றுமே விசுவாசமாக இருக்கும். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதால் பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களைக் கடுமையாக எதிர்ப்போம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார், ஆனால், கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என அவர் வெள்ளைக் குடை பிடிக்கிறார். தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடிச் சென்று பிரதமரை அழைத்து வருகிறார் பிரதமர் இடத்தில் சரணாகதி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகிறார்கள்.” எனப் பேசினார்.