Breaking News

“விளம்பரத்துக்காக செங்கல்லை காட்டுகிறார் உதயநிதி” - இபிஎஸ் விமர்சனம்...!!

“விளம்பரத்துக்காக செங்கல்லை காட்டுகிறார் உதயநிதி” - இபிஎஸ் விமர்சனம்...!!

இந்தியா: தமிழ்நாடு

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் திருச்சியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் மூன்று முக்கிய கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்கின்றன. ஒன்று அதிமுக, திமுக மற்றும் பாஜக. ஆனால் தேர்தலில் போட்டி என்று வரும்போது அது அதிமுகவா அல்லது திமுகவா என்றுதான். அதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் வெற்றிபெற நாம் அனைவரும் அரும்பாடு படவேண்டும்.

திமுக தலைவர் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று பிரதமரை விமர்சிப்பார். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. மற்றொன்று என்னைப் பற்றி விமர்சிப்பார். இதைத் தவிர அவர் வேறு எதுவும் பேசுவதில்லை. சரக்கு இருந்தாதானே பேசமுடியும். அவர் ஒரு பொம்மை முதலமைச்சர்.

தமிழ்நாட்டை நாங்கள் கெடுத்துவிட்டோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். எம்ஜிஆர் இந்த மண்ணில் பிறந்த ஒரே காரணத்தால் மட்டுமே உங்கள் குடும்பத்திடம் இருந்து தமிழ்நாடு தப்பியது. இன்றைக்கும் எந்த இடத்துக்கு சென்றாலும் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை மூன்று ஆண்டுகளாக காட்டிக் கொண்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையால் மட்டுமே மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவந்தது. இந்த செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டியிருக்க வேண்டும். ரோட்டில் காட்டி எந்த பிரயோஜனமும் இல்லை. விளம்பரத்துக்காக செங்கல்லை காட்டுகிறார் உதயநிதி.

மக்கள் உங்களுக்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை தந்தார்கள். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி நிதியை பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாமே. அதற்கான தில், திராணி அவர்களுக்கு இல்லை.

தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள், விவரமானவர்கள். திமுகவினர் சொல்வதை எல்லாம் அவர்கள் நம்ப தயாராக இல்லை. இந்த நீட் தேர்வு யாருடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது” என்று இபிஎஸ் பேசினார்.