Breaking News

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் நடனப்புயல் - இசைப்புயல்

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் நடனப்புயல் - இசைப்புயல்

இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோகிராஃபியில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார்.

நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். 

இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி மனோஜ் என்.எஸ்.இயக்க பிரபுதேவாவுடன் யோகிபாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.  ஏற்கனவே பிரபுதேவா நடித்த காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ,மின்சார கனவு உள்ளிட்ட 5 படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்போது ஆறாவது முறையாக இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

படத்தின் அறிவிப்பு போஸ்டரில் முக்காலா முக்காபுல்லா பாடலில் இடம்பெற்ற தலை, கைகள், கால்கள் இல்லாத பிரபுதேவாவின் போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நடனம் சம்பந்தப்பட்ட படமாக இது இருக்குமோ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடனத்தில் பின்னி எடுத்துடுவாரே என்று மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக பிரபுதேவா தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு முக்கியமான ரோல் என கூறப்படுகிறது. இந்தப் படம் தவிர்த்து மலையாளத்தில் அனுஷ்காவுடன் நடிப்பதற்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.