Breaking News

மலையாளத் திரையுலகில் வரலாற்று சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்...!!

மலையாளத் திரையுலகில் வரலாற்று சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்...!!

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையடுத்து வந்தனர். 

இந்த நிலையில் 25ஆவது நாளைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாக தற்போது புது சாதனையைப் படத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக டொவினோ தாமஸ் நடித்த 2018 படம் ட்ரூ.175 கோடி வசூலித்து முதல் இடத்திலிருந்த நிலையில் அதன் சாதனையை முறியடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது மோலிவுட் திரையுலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதுவரை மலையாளத்தில் பிரேமலு -ரூ.115 கோடி, லூசிஃபர் - ரூ.127 கோடி, புலிமுருகன் - ரூ.152 கோடி, 2018 - ரூ.175 கோடி, மஞ்சும்மல் பாய்ஸ் - ரூ.200 கோடி ஆகிய படங்கள் அதிக வசூலித்த படங்களாக டாப் 5 இடத்தில் இருக்கிறது. இதில் பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்கள் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.