Breaking News

"எந்த விளைவுகளையும் சந்திக்க தயார்" - ஆக்லாந்து பேரணியில் Posie Parker மீது தக்காளி சாற்றை தெளித்த பெண்...!!

"எந்த விளைவுகளையும் சந்திக்க தயார்" - ஆக்லாந்து பேரணியில் Posie Parker மீது தக்காளி சாற்றை தெளித்த பெண்...!!

திருநங்கைகளுக்கு எதிரான இங்கிலாந்து செயற்பாட்டாளர் Posie Parker ஆக்லாந்தில் சனிக்கிழமை காலை ஏற்பாடு செய்திருந்த பேரணியில் திருநங்கைகளுக்கு ஆதரவான ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‌.

இதன்போது Posie Parker மீது தக்காளி சாறு தெளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து  Posie Parker பேரணியில் உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் எலி ருபாஷ்கின் என்ற பெண் சர்ச்சைக்குரிய பேச்சாளர் Posie Parker மீது தக்காளி சாற்றை தெளித்ததாக கூறினார்.

இது தொடர்பில் ருபாஷ்கின் கூறுகையில், திருநங்கைகளுக்கு ஏற்படும் தீங்கிற்கான உருவகமாக தக்காளிச் சாற்றை பார்க்கர் மீது கொட்டத் தேர்ந்தெடுத்தேன்.

நான் மிகவும் பெருமைப்படுகிறேன், நான் தக்காளி சாற்றை அவர் மீது கொட்டினேன், நான் அதை மீண்டும் செய்வேன், மீண்டும் மீண்டும் செய்வேன் - நான் ஒரு வருடம் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்தார்.

மேலும் கீன்-மின்ஷூலின் வார்த்தைகள் திருநங்கைகளுக்குள் மிகவும் வெறுப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியதாக ரூபாஷ்கின் கூறினார்.

திருநங்கைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். வெறுக்கத்தக்க பேச்சு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையாக மாறுகிறது என்று அவர் கூறினார்.

கொலம்பியாவில் இருந்து நியூசிலாந்திற்கு வந்த ருபாஷ்கின், நியூசிலாந்து தனக்கு ஒரு "புகலிடமாக" மாறிவிட்டது என்றும், கீன்-மின்ஷுல் அதை எடுத்துச் செல்ல தன்னால் அனுமதிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

ருபாஷ்கின் சாற்றை எறிந்த பிறகு, தன்னை சிலர் இழுத்து சென்றதாகவும் கீன்-மின்ஷூல் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

நான் யாரையும் அடிக்கவில்லை, தக்காளி சாற்றை தெளித்தேன். அவருக்கு கொஞ்சம் வைட்டமின் சி தேவைப்பட்டது என கிண்டலாக கூறினார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் தன்னை தொடர்பு கொள்ளவில்லை, இருப்பினும் தக்காளி சாற்றை வீசியதில் இருந்து தனக்கு மூன்று கொலை மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறினார்.

தன்னை காவல்துறை தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் தேவைப்பட்டால் விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.

இதனிடையே பேரணியின் போது நடந்த அனைத்து குற்றச் செயல்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னதாக, கீன்-மின்ஷுல் தனது ஆக்லாந்து பேரணியில் தன் மீது தக்காளி சாறு தெளிக்கப்பட்ட போது "தக்காளி சாற்றை ஊற்றிய பிறகு தான் பயந்துவிட்டேன்" என  Stuff செய்தி பிரிவிற்கு கூறினார்.

மேலும் "இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை,  நியூசிலாந்திற்கு என்ன ஒரு அவமானகரமான நாள்." என அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது

"இந்த செய்தி Stuff இணையத்தில் வெளியிடப்பட்டது