Breaking News

நயன்தாராவிற்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கு...!!

நயன்தாராவிற்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கு...!!

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் என பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அன்னபூரணி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டூடியோஸ், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது எனவும் அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதற்கும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம் எனவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு கடிதம் எழுதியிருந்தது. 

இந்த நிலையில் மகாராஷ்டிரா தானே பகுதியில் நயா நகர் காவல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த மிரா பயேந்தர் என்பவர், இந்து மத உணர்வை புண்படுத்தியுள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில் நயன்தாரா, படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.