Breaking News

வாழ்நாள் முழுவதும் போராடிய விஜயகாந்த் - கொரோனாவுடன் போராடிய இறுதி நிமிடங்கள்..!!

வாழ்நாள் முழுவதும் போராடிய விஜயகாந்த் - கொரோனாவுடன் போராடிய இறுதி நிமிடங்கள்..!!

தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். கருப்பாக இருந்தாலும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கு ஊட்டியவர். இவர் அரசியலிலும் தடம் பதித்தவர். திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆளும் கட்சி, கூட்டணி கட்சியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்தார்.

அவர் நினைத்திருந்தால் கூட்டணி கட்சியை எதிர்க்காமல் மக்களுக்கு குரல் கொடுக்காமல் அடுத்தடுத்த நிலைகளை அடைந்திருக்க முடியும். ஆனால் அவர் வந்ததே மக்களுக்கு சேவை செய்யத்தானே! அதனால் அவர் எந்த வித சமரசங்களுக்கும் இடம் தரவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் அவ்வபோது வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவருக்கு என்னென்ன உடல் உபாதைகள் இருக்கின்றன என்பது குறித்து நெருங்கிய வட்டாரங்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதை பார்ப்போம். விஜயகாந்துக்கு நீரிழிவு நோய், தைராய்டு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்டவை இருக்கிறது. இந்த நீரிழிவு நோயால் கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலது கால் விரல்களில் சிலவற்றை மியாட் மருத்துவமனை கடந்த 2022 ஆம் ஆண்டு அகற்றியது. தைராய்டு பிரச்சினையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது.

அதற்கு சிகிச்சை கொடுத்து வந்தார்கள். அதன் பிறகு அவ்வப்போது பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு செல்வார், உடனே ஓரிரு நாட்களில் வீடு திரும்பிடுவார். சிறுநீரக பிரச்சினை இருந்தது. அது நாளடைவில் சரியானது. அவருக்கு முதுகுதண்டு வடத்திலும் பிரச்சினை இருக்கிறது. தைராய்டும் சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டு அவருக்கு ஞாபக மறதி இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். எனினும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பினார். அடுத்த சில நாட்களில் பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேப்டன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் சுவாசம் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நுரையீரல் அலர்ஜியால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது வீட்டிலும் கட்சி அலுவலகத்திலும் கட்சி கொடியானது அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.