Breaking News

பாகிஸ்தானில் வரலாறு காணாத பனிப்பொழிவு - காருக்குள் சிக்கி 21 பேர் பலி...!!!

பாகிஸ்தானில் வரலாறு காணாத பனிப்பொழிவு - காருக்குள் சிக்கி 21 பேர் பலி...!!!

பாகிஸ்தானில் உள்ள சுற்றுலா தலத்தில் வரலாறு காணாத பனிப் பொழிவால் கார்களுக்குள் மூச்சுத் திணறி, ஒன்பது சிறுவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள முர்ரீ, கலியாத் மலைவாசத் தலங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 3ம் திகதி முதல் லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் முர்ரீக்கு படையெடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முர்ரீயில்
கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாதபடி அடர்த்தியான பனிப் பொழிவால் சாலைகள் மூடப்பட்டன.

இதனால் ஆயிரக் கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் பனிப்போர்வையில் சிக்கின.

இதையடுத்து ராவல்பிண்டி - முர்ரீ இடையிலான சாலை மூடப்பட்டு, வாகனங்களில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி துவங்கியது.

மேலும், முர்ரீ பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டது. மீட்பு படையினர் சாலையை சூழ்ந்திருந்த பனிக்கட்டிகளை அகற்றி, வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். அப்போது பனியில் மூடிய கார்களில் மூச்சுத் திணறி ஒன்பது சிறுவர்கள் உட்பட, 21 பேர் பலியாகி இருந்தது தெரியவந்தது.

பனிப்பொழிவில் சிக்கி 21 பேர் பலியானது அதிர்ச்சி அளித்துள்ளதாக பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்கு தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்யத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.