Breaking News

1.10 கோடி சம்பளம் : டீல் ஓகேவா? – இந்திய மாணவியை வேலைக்கு அழைக்கும் கூகுள் – யார் இந்த சம்ப்ரீத்தி?

1.10 கோடி சம்பளம் : டீல் ஓகேவா? – இந்திய மாணவியை வேலைக்கு அழைக்கும் கூகுள் – யார் இந்த சம்ப்ரீத்தி?

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது பிரபல நிறுவனமான கூகுள்.

பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர் யாதவ் - திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனரான ஷிஷி பிரபா தம்பதியின் மகளான சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண் உடன் பள்ளிக் கல்வியை முடித்தார்.

அதன்பின்னர் டெல்லி இன்டர்நெஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று பின்னர் 2016 ஆம் ஆண்டு JEE மெயின்ஸ் தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார் சம்ப்ரீத்தி.

டெல்லி டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பிடெக் படிப்பை 2021 மே மாதம் சம்ப்ரீத்தி முடித்திருக்கிறார்.

இந்நிலையில் படிப்பை முடித்த கையோடு அடோப், பிளிப்கார்ட் ஆகிய முன்னணி நிறுவனங்கள் இவருக்கு வேலை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தன.

பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய நேர்காணலில் தேர்ச்சிபெற்று அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சம்ப்ரீத்தி தற்போது ஆண்டுக்கு 44 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுவருகிறார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக சம்ப்ரீத்தி விண்ணப்பிக்க, உடனடியாக ஆன்லைன் மூலமாக நேர்காணலுக்கு அழைத்திருக்கிறது கூகுள். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த நேர்காணல் அனைத்திலும் அவர் தேர்ச்சி பெறவே, ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.

தனது சொந்த முயற்சியின் மூலமாக, கூகுளில் விண்ணப்பித்து வேலை பெற்ற சம்ப்ரீத்தி சீக்கிரத்தில் லண்டனில் உள்ள கூகுள் நிறுவனத்தில் தனது பணியைத் துவங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.