Breaking News

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தமை குறித்து பேராயர்  அரசாங்கத்திற்கு பாராட்டு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தமை குறித்து பேராயர்  அரசாங்கத்திற்கு பாராட்டு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் கௌரவ பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பாராட்டுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று (2020.12.16) தெரிவித்தார்.

2019 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கௌரவ பிரதமரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடுவபிடிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 24 வீடுகள் திட்டத்தின் பணிகள் இதுவரை நிறைவடைந்த இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து விரைவில் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு கௌரவ பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தன வைத்தியசாலையினால் பெற்றுக் கொடுக்கப்படும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அறிவுறுத்திய கௌரவ பிரதமர், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் சிகிச்கை அறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கலந்துரையாடலின் நிறைவில் அங்கு கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டதாவது,

கௌரவ பிரதமர் அவர்களே, நான் உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனிப்பிட்ட ரீதியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு எமக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில், விசேடமாக இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எமது மக்கள் பாதிக்கப்பட்டமையினாலேயே நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றோம். எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு உங்களது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம். அது குறித்து நாம் கௌரவ பிரதமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்பாடு செய்தமை குறித்தும் கௌரவ பிரதமர், கௌரவ அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.