Breaking News

மஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர

மஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர

 

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றிய அவர், “மஹர சிறைச்சாலையில், நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுவரை 8 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.

 

50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

தண்டனைப் பெறுபவர்கள் சிறைச்சாலைகளில் இருந்தாலும், அவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பதாகவே கருதப்படும். எனவே, இந்தச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

மஹர சிறைச்சாலையில் கொரோனாவினால் மட்டும் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிறைச்சாலைகளில் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் 8 பேரளவில் இருக்கிறார்கள்.

 

இதனால்தான் வைரஸ் அங்கு வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில், தங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் அவர்கள் கோரியிருந்தார்கள்.

 

இது நியாயமானதொரு கோரிக்கையாகும். இதனை நிராகரித்தமையால்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

இது ஜனநாயகத்துக்கு கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் உரிய பதிலை வழங்க வேண்டும்.” என கூறினார்.