Breaking News

"அக்கா, அக்கான்னு சொல்வார் அண்ணாமலை..ஆனா நோ யூஸ்" - பாஜகவிலிருந்து விலகிய திலகவதி ஆவேசம்...!!

"அக்கா, அக்கான்னு சொல்வார் அண்ணாமலை..ஆனா நோ யூஸ்" - பாஜகவிலிருந்து விலகிய திலகவதி ஆவேசம்...!!

இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகிய 100 பெண் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த நிலையில், அண்ணாமலை தங்களின் எந்த கோரிக்கைகளையும் ஏற்கவில்லை எனவும், அனைவருமே அதிருப்தியில் இருப்பதாகவும் அக்கட்சியிலிருந்து விலகிய நிர்வாகி திலகவதி முருகேசன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது...

உண்மையான உழைப்புக்கு ஏற்ற மரியாதை இந்த சூழலில் இல்லை. அதனால் நாங்கள் அதிருப்தி அடைந்தோம். பெண்கள் முன்னேறி வந்துவிடக்கூடாது என்ற சூழல் இருப்பதாகவே நான் சொல்வேன்.

தங்களுக்கு தேவையான ஆட்களை அவர்கள் சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் திறமையாக இருக்கிறார்களா உழைக்கிறார்களா நேர்மையானவர்களா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. மாநிலத் தலைமை இதற்கு நடவடிக்கை எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நடவடிக்கை எடுக்கிறேன் அக்கா பார்க்கிறேன் அக்கா என்று சொன்னார். ஆனால், உள்கட்சிக்குள் பிரச்சனை நடக்கிறது என்று 10 பேர் சொன்னால் மாவட்டத் தலைவரை அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்போம். அதை சரி செய்வோம் என்று அவர் நடந்துகொள்ளவில்லை.

நாங்கள் பலமுறை எங்களுக்கு பிரச்சனை இருப்பதாக சொன்னோம். பழைய நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பெரிய பெரிய பொறுப்புகளை வழங்கினார்கள். மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை வரவேற்பதைபோல், கட்சியைவிட்டு வெளியில் சென்றாலும் ஏற்கவே வேண்டும்.

ஆனால், கட்சியில் இருந்து வெளியில் செல்பவர்களை துரோகி என்றார். எனக்கு அதை பார்க்கும்போது சிரிப்பாக இருந்தது. துரோகிகளை கூடவே வைத்துக்கொண்டு வேண்டாம் என்று வெளியில் செல்பவர்களை துரோகிகள் என்கிறார்.

இந்த கட்சியில் இருந்து அந்த கட்சிக்கு செல்பவர்களும் வாழ்க என்று கோஷம் தானே போடப்போகிறார்கள். ஆடு மாடா மேய்க்கப்போகிறார்கள்? ஆடு மாடு மேய்க்கப்போனால் கூட சந்தோசப்படுவேன் என்றார். அப்படியென்றால் நீங்கள் ஐபிஎஸ் பதவியை விட்டுவிட்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பதே இல்லை. அதில் இருந்தே நல்லது செய்திருக்கலாமே?

இன்னும் பலர் பாஜகவில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது. அத்தனை பேரும் அதிருப்தியில் உள்ளார்கள். பலர் போன் செய்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள் என்றார்.