Breaking News

இருக்குற பிரச்சனையில பேனா நினைவு சின்னம் எதுக்கு?; உருப்படியா ஏதாவது செய்ங்க - சசிகலா...!!

இருக்குற பிரச்சனையில பேனா நினைவு சின்னம் எதுக்கு?; உருப்படியா ஏதாவது செய்ங்க - சசிகலா...!!

இந்தியா: தமிழ்நாடு

கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை கடலில் நிறுவுவது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்திய நிலையில்
இதுதொடர்பாக சசிகலா அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

திமுக அரசு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்காக சென்னை மெரினாவில் கடலின் நடுவே 137அடி உயர பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கிறது.

இதில் கலந்து கொண்டவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக எடுத்துரைத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் நியாயமான கருத்துகளை பேசிவருகிறார்கள்.

ஆனால் திமுகவினரோ அவர்களின் கருத்துக்களைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படுத்தி யாரையும் பேச விடாமல் துரத்தி அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

தற்போது நடந்து கொண்டு இருப்பது கருத்துக்கேட்பு கூட்டமா? அல்லது கட்டப்பஞ்சாயத்தா? என்கிற அளவுக்கு எண்ணத் தோன்றுகிறது.

இந்த திட்டத்தை எதற்காக அனைவரும் எதிர்க்கிறார்கள் என்பதை திமுகவினர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். கடலில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.

மேலும், இன்றைய கடும் நிதி நெருக்கடியில், இந்த திட்டத்திற்காக பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழிப்பது உகந்ததா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

யாரும் இதனை ஒரு அறிவார்ந்த செயலாக பார்க்கமாட்டார்கள். மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் கடலின் நடுவே இதுபோன்ற கட்டுமானங்களை ஏற்படுத்தும்போது, இது சமூகவிரோதிகளின் புகலிடமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இதில் சமூக விரோத செயல்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு மிகுந்த விழிப்புடன் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

ஏற்கனவே பல்வேறு பணிச் சுமைகளை தாங்கிக்கொண்டு இருக்கும் காவல் துறையினருக்கு இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் இந்த ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, திமுக ஆட்சியாளர்கள் இது போன்று யாருக்கும் பலனளிக்காத பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்காக நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு பயனளிக்கின்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.