Breaking News

அன்புமணினா டீசன்ட்னு நினைச்சீங்களா?; வேட்டிய மடிச்சு கட்டுனா நான் யார்னுதெரியும் - அன்புமணி ஆவேசம்...!!

அன்புமணினா டீசன்ட்னு நினைச்சீங்களா?; வேட்டிய மடிச்சு கட்டுனா நான் யார்னுதெரியும் - அன்புமணி ஆவேசம்...!!

இந்தியா: தமிழ்நாடு

என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பது விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக நேற்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ஆவேச பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது...

நான் சென்னையில் இருக்கிறேன். ஆனால் மண்ணை எடுக்கிறார்களே விவசாயத்தை அழிக்கிறார்களே என எனக்கு கோபம் வருகிறது.

உங்களுக்கெல்லாம் எப்பய்யா கோபம் வரும்? இந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு எப்பய்யா கோவம் வரப்போகுது?

எவனோ வட நாட்டிலிருந்து வந்து இங்கு உங்களை அழித்துக் கொண்டிருக்கிறான். மண்ணைச் சுரண்டி, விவசாயத்தை அழித்து, தண்ணீரை உறிஞ்சி, பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

எனக்கென்ன? எங்கேயோ நடக்கிறது என எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த மாவட்டமும் அழிந்துவிடும்.

நீங்க வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி‌ இந்த அன்புமணி ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்கவிட மாட்டான்.

அன்புமணின்னா டீசண்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்கான். நான் வேட்டியை மடிச்சுக் கட்டுனா தெரியும் நான் யார்னு. சும்மா அன்புமணின்னா டீசண்ட்னு நினைச்சிக்கிட்டு இருக்கான். ஏன்னா இது என் மண்ணு.

என் மக்கள் விவசாய பிரச்சினை வாழ்வாதார பிரச்சனை, அதுக்கு ஒரு பிரச்சினைனா சும்மா விட மாட்டேன்'' என ஆவேசமாகப் பேசினார் அன்புமணி.

அப்படியே வேட்டியை மடித்துக் கட்டிய அன்புமணிக்கு நிர்வாகிகள் மேடையில் பின்னால் இருந்து மண்வெட்டி ஒன்றை கையில் கொடுக்க அதை உயர்த்திக் காட்டினார்.

பின்னர் மண்வெட்டி தான் எங்கள் ஆயுதம் எனத் தெரிவித்தார் அன்புமணி.

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸுக்கு வீரவாள் பரிசாக அளித்தனர். இதன்போது 'இனிமேல் கத்தியெல்லாம் கொடுக்காதீங்க அடுத்தமுறை மண்வெட்டியை கையில் கொடுங்க' என நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.