Breaking News

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த இளைஞர்கள் - முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்சம் நிவாரணம்...!!

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த இளைஞர்கள் - முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்சம் நிவாரணம்...!!

மதுரை பாலமேடு மற்றும் திருச்சி அருகே உள்ள சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு நேற்று காலை‌ ஆரம்பமானது.

பரபரப்பாக இடம்பெற்று கொண்டிருந்த இந்த ஜல்லிக்கட்டில் பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 26) என்பவர் அபாரமாக செயல்பட்டு காளைகளை அடக்கினார்.

இந்நிலையில் வாடிவாசலை விட்டு ஆவேசமாக வெளியேறி வந்த மாடு ஒன்று வாசலின் வலது பக்கமாக நின்று கொண்டிருந்த அரவிந்த்ராஜ் வயிற்றில் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரை சேர்ந்த அரவிந்த் என்ற 25 இளைஞர் மாடு முட்டியதில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் பாலமேடு மற்றும் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் அரவிந்த் (25) என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.