Breaking News

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த குழந்தை‌ - அதிர்ச்சி வீடியோ வெளியீடு...!!

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த குழந்தை‌ - அதிர்ச்சி வீடியோ வெளியீடு...!!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளது என்ற குற்றச்சாட்டு சமீப காலங்களாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த அரசும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்‌ அங்கு குழந்தை ஒன்று கையில் துப்பாக்கியுடன் வீட்டின் முகப்பு அறையில் சுற்றி திரிந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பீச் குரோவ் பகுதியில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

அந்த குழந்தை துப்பாக்கியை முன்னும், பின்னும் ஆட்டியபடியும், பல முறை அதனை சுட்டபடியும் செல்கிறான்.

ஒரு சமயம் அதனை தன்னை நோக்கியும் சிறுவன் காட்டியபடி செல்லும் அதிர்ச்சி காட்சியும் வெளிவந்துள்ளது.

இதனை பக்கத்து வீட்டில் இருந்த பெண் ஒருவர் கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் கவனித்துள்ளார்.

அதனை பகிர்ந்தும் உள்ளார். இதனாலேயே எனக்கு இந்தியானாவில் வசிக்க விருப்பம் இல்லை என அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு தெரிவித்துள்ளார்

எனினும் அந்த துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் இல்லை. இதனால், பல முறை அந்த சிறுவன் சுட்டபோதும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொலிஸார் சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர் தன்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என மறுத்துள்ளார்.

பின்னர் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் மூடப்பட்டு இருந்த மேஜையின் பின்புறம் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற முதன்மை நிலை பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் பள்ளியில் பணியாற்றிய 30 வயதுடைய ஆசிரியை ஒருவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் ஆசிரியை பலத்த காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.