Breaking News

"கனவு முடிஞ்சுபோச்சு".. - ரொனால்டோவின் உள்ளம் உருக வைக்கும் பதிவு...!!

"கனவு முடிஞ்சுபோச்சு".. - ரொனால்டோவின் உள்ளம் உருக வைக்கும் பதிவு...!!

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மொராக்கோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் உலக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது.

இதன் மூலம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரொனால்டோவின் கனவு தகர்ந்தது. உலகக்கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் வெளியேறியதை ஜீரணிக்க முடியாமல் மைதானத்திலேயே ரொனால்டோ கதறி அழுதார்.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து ரொனால்டோ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில்...

'போர்ச்சுகலுக்காக ஒரு உலகக் கோப்பையை வெல்வது என் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. நல்ல விடயமாக நான் போர்ச்சுகல் உட்பட சர்வதேச அளவிலான பல தொடர்களில் விளையாடி கோப்பைகளை வென்றேன்.

ஆனால் நம் நாட்டின் பெயரை உலகின் மிக உயரமான இடத்தில் வைப்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது.

எனது இந்த கனவை நனவாக்குவதற்காக நான் கடுமையாகப் போராடினேன்.

16 வருடங்களில் உலகக் கோப்பைகளில் நான் விளையாடிய 5 தொடர்களில்‌ பல கோல்களை அடித்து இருக்கிறேன்.

சிறந்த வீரர்களின் பக்க பலத்தோடும், லட்சக்கணக்கான போர்த்துகீசிய மக்களின் ஆதரவையும் நான் பெற்று இருக்கிறேன். அவர்களுக்காக நான் என்னுடைய அனைத்தையும் கொடுத்தேன். தற்போது அனைத்தையும் மைதானத்திலேயே விட்டுவிட்டேன். இதுவரை போராடாமல் என்னுடைய முகத்தை நான் திருப்பியது இல்லை.

எனது கனவையும் நான் கைவிட்டது இல்லை. ஆனால், நேற்று எனது கனவு சோகத்தோடு முடிவடைந்தது. இதற்கு அதிக அளவில் ஆவேசப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனால், போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு என்பது ஒரு கணம் கூட மாறவே இல்லை என்பதை உங்களிடம் நான் தெரியப்படுத்தவும், நீங்கள் அனைவரும் இதனை அறிய வேண்டும் எனவும் விரும்புகிறேன்.

நான் எப்போதும் அனைத்து வீரர்களின் கோல்களுக்காகவும் போராடுபவனாகவே இருந்தேன்.

அதேபோல் எனது சக வீரர்களிடம் என் நாட்டிற்காகவும் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இப்போதைக்கு அதிகம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. நன்றி போர்ச்சுகல். நன்றி கத்தார். உலகக்கோப்பை கனவு நீடிக்கும் போது நன்றாக இருந்தது. தற்போது நல்ல ஆலோசகராகவும் ஒவ்வொருவரும் அவரவர் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் நேரம்.' என்றார்.