Breaking News

தற்போதைய பொருளாதார நிலைக்கு என்னை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது : முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் !

தற்போதைய பொருளாதார நிலைக்கு என்னை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது : முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் !

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைக்கு என்னை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்த தனது சமீபத்தைய வெளியீடொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எவரையாவது குற்றம்சாட்டவேண்டும் என்றால் என்னை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது முன்னைய நிர்வாகம் முன்னைய அமைச்சரவை முன்னைய நிதியமைச்சர் மத்திய வங்கியின் நாணயசபை ஆகியவற்றை குற்றம்சாட்டவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் நிதி குறித்த தீர்மானங்கள் அனைத்தும் கூட்டாக எடுக்கப்பட்டன என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எந்த முடிவையும் நான் தனியாக எடுக்கவில்லை தன்னிச்சையாக எடுக்கவில்லை இவை கூட்டாக எடுக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என தெரிவித்து கடன்களை செலுத்துவதை இடைநிறுத்துவது என்ற ஏப்பிரல் 12 தீர்மானத்தை சுதந்திரத்தின் பின்னர் இலங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என அவர் வர்ணித்துள்ளார்.

இலங்கை நிதி நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பல தடவை இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சதிதிட்டத்தின் பின்னால் பல முகவர்கள் செயற்பட்டனர் இலங்கையை எப்படியாவது வங்குரோத்து நிலைக்கு தள்ளி வெளிநாடுகளிடம் மண்டியிடச்செய்வதே அவர்களின் நோக்கம் என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நான் ஆளுநராக இருந்தவேளை என்னை பயன்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதற்கு இந்த வெளிநாட்டு சக்திகளும் அவர்களின் கைப்பொம்மைகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர் ஆனால் நான் அவர்களின் வலைக்குள் விழாததன் காரணமாக என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இலங்கையின் பொருளாதார படுகொலை பற்றிய இதுவரை வெளிவராத தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ள அவர் இந்த படுகொலையை மேற்கொண்ட உண்மையான நபர்களை அடையாளம் காண்பதாகவும் தெரிவித்துள்ளார்.