Breaking News

மனிதர்களைக் கொல்லும் ரோபோக்கள் - அமெரிக்க காவல்துறையின் விபரீத முயற்சி...!!

மனிதர்களைக் கொல்லும் ரோபோக்கள் - அமெரிக்க காவல்துறையின் விபரீத முயற்சி...!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாண பொலிஸார், அசாதாரண சூழலில் ரோபோக்களை  பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அப்பாவி பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இவ்வாறு பொது இடங்களில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை சமாளிப்பதற்கு ஆயுதம் ஏந்திய பிரத்யேக போலீஸ் படை பயன்படுத்தப்படுகிறது.

இந்த பிரிவில் ரோபோக்களை பயன்படுத்தி தீவிரவாத தாக்குதல், கலவரம் போன்ற அசாதாரண சூழல்களில் மனிதர்களைக் கொல்ல அவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சான் பிரான்சிஸ்கோ காவல்துறை விண்ணப்பித்துள்ளது.

மேலும் மரண தண்டனைகளை நிறைவேற்றும் பணிகளிலும் ரோபோக்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரோபோக்களை மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்த கொள்கை விதிமுறைகளில் இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வரைவுகளில் சில திருத்தங்களை மேற்கொண்டு சான் பிரான்சிஸ்கோ காவல்துறை மீண்டும் விண்ணப்பித்திருக்கும் நிலையில், இதற்கு அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோ காவல்துறையில் 17 ரோபோக்கள் உள்ள நிலையில், வெடிகுண்டுகளை தேடுவது உள்ளிட்ட சவாலான பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ காவல்துறையின் இந்த முயற்சிக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.