Breaking News

நியூசிலாந்தில் இந்தியர்களின் வணிக நிலையங்கள் தொடர்ந்து குறிவைப்பு - மற்றுமொரு கொள்ளை சம்பவம் ஹமில்டனில்...!!

நியூசிலாந்தில் இந்தியர்களின் வணிக நிலையங்கள் தொடர்ந்து குறிவைப்பு - மற்றுமொரு கொள்ளை சம்பவம் ஹமில்டனில்...!!

ஆக்லாந்தில் Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மற்றுமொரு இந்தியரின் வணிக நிலையம் கொள்ளையர்களால் குறிவைக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்தின் Sandringham இல் கடந்த புதன்கிழமை 34 வயதான ஜனக் படேல் என்ற நபர்  இரவு அவர் வேலை செய்து கொண்டிருந்த ரோஸ் காட்டேஜ் சூப்பரெட் Dairy Shop இற்கு வெளியே ஒரு கொள்ளையனை எதிர்கொண்டபோது கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் நண்பகல் ஹமில்டனில் உள்ள இந்தியர் ஒருவரின் Vape Store கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Vapeys Vape Store என்ற குறித்த கடையின் உள்ளே சுற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது, கடையில் இருந்த பணம் மற்றும் பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள பொருட்களை திருடர்கள் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். 

இவற்றைத் தடுக்க முயன்ற அவ்வழியே வந்த நபர் ஒருவரும் குற்றவாளி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். குற்றவாளி அவரது கையை கத்தியால் கீறி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் நலமாக இருக்கிறார்.

தீங்கிழைக்கும் நோக்கத்துடன் குற்றவாளிகள் அச்சமின்றி இருந்ததாகவும் தற்போது கடையை மூடும் நிலையில் இருப்பதாகவும் Vapeys கடை உரிமையாளர் நரேஷ் முருகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என நம்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் தொடர்ந்து இந்தியர்களின் வணிக நிலையங்கள் குறிவைக்கப்பட்டு கொள்ளையிடப்படுகின்றன.

இந்நிலையில் தகுந்த பாதுகாப்புகள் இன்றி கடை உரிமையாளர்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இத்தகைய தொடர் சம்பவங்கள் நியூசிலாந்து வாழ் இந்திய சமூகங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறது என்பதே தற்போது மக்கள் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது.