Breaking News

பார்த்திபனுக்கே தெரியாமல் ஓடிடி-யில் வெளியான 'இரவின் நிழல்'...!!

பார்த்திபனுக்கே தெரியாமல் ஓடிடி-யில் வெளியான 'இரவின் நிழல்'...!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 'இரவின் நிழல்' ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை கடந்த மாதம் 31 ஆம் திகதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் பார்த்திபன்.

அந்த பதிவில், "அமேசானில் இன்றோ (31.10.2022) நாளையோ (01.11.2022) ‘இரவின் நிழல்’ வந்தே விடும். அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் இருக்கிறோம். பார்ப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

பின்பு சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதம் ஆகிறது என அமேசான் தரப்பு சொல்வதாகத் தெரிவித்திருந்தார்.

அதோடு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டு ஓடிடியில் வரும்போது பேராதரவு தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்நிலையில், 'இரவின் நிழல்' படம் அமேசானில் தனக்கே தெரியாமல் ரிலீஸாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மகிழ்ச்சியை கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல். ப்ளீஸ் நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன். நன்றியுடன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஓடிடி ரிலீஸ் பற்றி அமேசான் தரப்பும் எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை அறிவிக்காத நிலையில் சமூக வலைதளங்களில் அமேசான் ஓடிடியில் படம் இருப்பது போல் சில புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.