Breaking News

பத்மஸ்ரீ.திரு.கொத்தமங்கலம் சுப்புவின் கொள்ளுப் பேரன் என்றால் சும்மாவா - மிருதங்கம் வாசித்து அசத்திய சாத்விக்

பத்மஸ்ரீ.திரு.கொத்தமங்கலம் சுப்புவின் கொள்ளுப் பேரன் என்றால் சும்மாவா - மிருதங்கம் வாசித்து அசத்திய சாத்விக்

கொள்ளுத் தாத்தாவின் பாடலுக்கு மிருதங்கம் வாசித்து அசத்திய சாத்விக்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரம் ஹூஸ்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் திரு.கிருஷ்ணன் சங்கரநாராயணன் மற்றும் திருமதி.ஐஸ்வர்யா சீனிவாசன் அவர்களின் மகன் செல்வன்.சாத்விக் சங்கரநாராயணன் மிருதங்கம் அரங்கேற்றம் நடைபெற்றது. நிகழ்வினைச் சிறப்பிக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர்.

மிருதங்க அரங்கேற்ற விழா கடவுள் வழிபாட்டுடன் ஆரம்பம் ஆனது. செல்வன். சாத்விக் சங்கரநாராயணன் குரு திரு.சங்கர் அய்யர் மற்றும் பெற்றோர்களின் ஆசி பெற்று தனது அரங்கேற்ற நிகழ்விற்கு ஆயத்தம் ஆனார்.  திருமதி.ஐஸ்வர்யா சீனிவாசன் அவர்களின் தந்தை திரு.சுப்பு சீனிவாசன், தனது துவக்க உரையில், செந்தமிழ் சொல்லில் அவையினரை வரவேற்றார். இவர் திரை மற்றும் எழுத்துத் துறையில் புகழ்பெற்ற பத்மஸ்ரீ.திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வன். சாத்விகின் பெற்றோர்கள் இருவரும் அவையினரை வரவேற்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் திருமதி. வித்வதா அனிருத் மற்றும் செல்வன்.கிரத்து சங்கரநாராயணன் இருவரிடமும் ஒப்படைத்தனர். தொகுப்பாளர் செல்வன்.கிரத்து, தெய்வ வாத்தியமான மிருதங்கத்தின் மகத்துவம் மற்றும் மிருதங்கம் உருவான கதையினை மிகத்தெளிவாக விளக்கினார்.

சாத்விகின் மிருதங்க அரங்கேற்றத்தின் முதல் பாடல், திரு.துளசி வனம் அவர்களின் பாடலாக ராகம் காம்போதியில் அமைக்கப்பட்டிருந்தது. சாத்விக் மிகத் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பார்வையாளர்களுக்கு தனது மிருதங்க திறமையை வெளிப்படுத்தினார்.

இரண்டாவதாக தியாகராஜ சுவாமிகள் அவர்களின் "மனசா எட்டுலு" பாடல் மலையமாருதம் ராகத்திலும், மூன்றாவதாக  திரு.ஜி.என்.பாலசுப்ரமணியன் அவர்களது "சிவானந்த காமவர்தனி" பாடல் ராகம் பந்துவராலியிலும் அமைந்து இருந்தது. 

சாத்விக், தனது அரங்கேற்ற நிகழ்வின் சிறப்பம்சமாக, கொன்னக்கோல் திறமையினை அதிநுட்பமாக கையாண்டார். வந்திருந்த அனைவரையும், தன்னுடன் ஜதியில் இணைந்து பாட வைத்து அவையினர் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டார்.  அரங்க மக்கள் அனைவருக்கும் சாத்விக்குடன் இணைந்து பாடிய கொன்னக்கோல் அனுபவம் ஒரு நீங்கா நினைவாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

நான்கு மற்றும் ஐந்தாவது பாடல்கள் தியாகராஜ சுவாமிகள் இயற்றிய "லேமி டால்பா", "தாசரதி" முறையே ராகம் பவானி மற்றும் தோடியில் அமைந்து சாத்விக் தனது மிருதங்க அரங்கேற்றத்திற்கு இன்னும் அழகு சேர்த்தார்.  தாசரதி பாடலின் இறுதியில், செல்வன்.சாத்விக் தனிஆவர்தனம் பகுதியாக கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் சிறிதும் சளைக்காமல் தனது மிருதங்க வாசிப்பால் அரங்கம் அதிரச்செய்தார்.

அடுத்ததாக, திரு.கோட்டீஸ்வர அய்யர் இயற்றிய பாடல் "அருள் செய்ய வேண்டும்" ராகம், ரசிகப்பிரியாவில் அமைந்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.  நிகழ்வின் ஏழாம் பாடல், திரு. இந்திரா நடேசன் அவர்கள் இயற்றிய "வந்தேகம் சங்கராச்சார்யம்" ராகம் கரகரப்பிரியாவில் ஆதிசங்கராச்சாரியார் பற்றிய பாடலாக இருந்தது.

அடுத்தபடியாக அமைந்த பாடல், சாத்விக்கின் கொள்ளுத்தாத்தா பத்மஸ்ரீ. கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய "மனமே முருகனின் மயில் வாகனம்" ராகம் ஹிந்தோளம் ஆகும். இந்த பிரபலமான பாடலின் முதல் நான்கு வரிகள் மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முழு பாடலுக்கு, சாத்விக்கின் குரு.சங்கர அய்யர் இசையமைத்து பாடி பாடலினை புதுப்பித்தார். செல்வன். சாத்விக் தனது கொள்ளுத்தாத்தா பாடலுக்கு மிருதங்கம் வாசித்தது அவருடைய குடும்பம் அனைவருக்கும் பெருமை சேர்த்தார் என்பதும், கடவுளின் அருள் என்பதும் முற்றிலும் உணர முடிந்தது. 

நமது பாரத தேசம் எழுபத்தி ஐந்தாம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் இந்த வேளையில் சாத்விக் தனது பங்காக, இந்திய வங்காள மொழியின் தேச பக்தி பாடலான "வந்தே மாதரம்" பாடலை தேஷ் ராகத்தில் அர்ப்பணித்தார்.

சாத்விக் சங்கரநாராயணன் அரங்கேற்றம் நிகழ்வின் பத்தாவது பாடலாக நமது இந்திய பஜன் பாடலில் தனது மிருதங்கம் அரங்கேற்றத்தினை திறம்பட அரங்கம் நிறை கரவொலியுடன் நிறைவு செய்தார்.

பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் சாத்விக் தனது ஏழாம் வயதில் நியூஜெர்சியில் குரு.திரு.டி.எஸ்.நந்தகுமார் அவர்களிடம் மிருதங்கம் பயில ஆரம்பித்தார். பின்னர், ஹூஸ்டனில் குரு.திரு.சங்கர் அய்யர் அவர்களிடமும், மற்றும் குரு.திரு.சங்கர் நாராயணசுவாமி, கொல்கத்தா அவர்களிடமும் பயின்று வருகிறார். மிருதங்கம் மட்டுமல்லாது, சாத்விக் கொன்னக்கோல் கலையினை திரு.ஆர்.ராம்குமார், சென்னை அவர்களிடம் பயின்று வருகிறார். 

இத்தகு திறமை மிகு சாத்விக், ஹூஸ்டனில் நடைபெற்ற பல அரங்கேற்ற நிகழ்வுகளுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிருதங்கம் மேல் உள்ள அளவு கடந்த பற்றின் உந்துதலால் சாத்விக் சொந்தமாக ஜதி உருவாக்கும் முயற்சியில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். பல நாட்டு கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள சாத்விக் தாய்மொழி தமிழ்  மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது, டச் மொழியிலும் சரளமாக பேசும் திறம் உள்ளவர். தற்பொழுது சமஸ்கிருத மொழியும் பயின்று வருகிறார். 

சாத்விக், பள்ளிகள் நடத்தும் விவாத மேடை குழுவில் பங்கு பெற்று நிறைய பரிசுகள் வென்றுள்ளார். ஏகம் ஹூஸ்டன் பகுதியின் அணித்தலைவராக இருந்து பற்பல நிதி திரட்டும் பணிகளில் சாதனைகள் புரிந்து பெருமை சேர்த்துள்ளார். 

அடுத்த வருட கல்லூரி ஆண்டில் மின்பொறியியல் துறை மற்றும் கணிணி மென்பொருள் துறையில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். 

குரு திரு. சங்கர் அய்யர்(எ) ராம்ஜி 1981ல் இருந்து நாற்பது வருடங்களாக ஹூஸ்டனில் மிருதங்கம் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  எண்ணிலடங்கா மிருதங்க வித்வான்களை உருவாக்கி இருக்கும் இவர்  ஹூஸ்டன் மாநகரத்தில் இருக்கும் மீனாட்சி திருத்தலத்தின் ஆஸ்தான வித்வான் ஆவார்.

கல்லூரி மற்றும் இசைத்துறையில் செல்வன். சாத்விக் பற்பல சாதனைகள் புரிய வளமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!! - கௌசல்யா சங்கர் நம்பி

செய்தி குறிப்பில் இருந்து எமது நிருபர் ஷீலா ரமணன்