Breaking News

வீணை இசையில் சிலிர்த்த டல்லாஸ்

வீணை இசையில் சிலிர்த்த டல்லாஸ்

 

“வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;”

எத்தனை புல்லரிக்கும் வரிகள் நமக்கு!

வீணையின் நாதம் என்றுமே எல்லோருக்கும் மெய்மறக்க,சிலிர்க்கச் செய்யும் ஓர் மென் இசை! இதன் இசை எவ்வாறு மிக நுட்பமானதோ, அதனை இசைக்க கற்றுக்கொள்வதும் மிக நுட்பமான ஒன்று. விரல்களின் விளையாட்டு!

டெக்சாஸ் செவன் ஸ்ட்ரிங்ஸ் மற்றும் வீ ஷார்ப் -Vsharp  குருகுலம்  டல்லாஸ் குழுவினர் 30 வீணை கலைஞர்கள் மற்றும் 20 கர்னாடக பாடகர்கள் 6 வயது முதல் பல்வேறு வயதுடைய ஆர்வமுள்ள கலைஞர்களை இணைத்து நான் மேலே சொன்னது போல அப்படியே நம்மை மெய்மறக்க செய்து எங்கோ அழைத்துச் செல்கின்றனர் இசையில்! கேளுங்கள் நீங்களும் உணர்வீர்கள்!

இதில் மிகப் பெருமையுடன் குறிப்பிட விரும்பும் ஓர் நபர் சிவசந்தர் ராமலிங்க சுவாமி, ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர். 

பாரதியின் “வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு”- இவ்வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டதோ! விரல்கள் இல்லா இவர் வீணையை இசைக்க இறை வலிமையே விரல்களாக இவர் கைகளில் இணைந்து மீட்டச் செய்கிறது என்றே சொல்லலாம்! மனம் இத்தனை திடமாக இருக்கும் போது குறை ஒன்றும் இல்லை, மனமே குறை ஒன்றும் இல்லை!

குருக்கள் வசந்த் வசீகரன் மற்றும் பிரியா பிரகாசம் இருவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.  இந்த முயற்சிக்கு முழு காரணமாக இருந்து தலைமை தாங்கி, சிக்கலான சமஸ்கிருத வசனங்களையும் இன்னிசையையும் 2 வாரங்களுக்குள் கற்றுக்கொண்டு பாடிய தங்கள் மாணவர்களை வெளி உலகிற்குக் காட்டி  பெருமை படுத்துகிறார்கள். 

குழுவின் முயற்சி:
 200 மணி நேரத்திற்கும் மேலாக செலவழித்து பயின்றும்,பயிற்றுவித்தும், 30+ வீணைகளை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரவழைத்தும்   தொன்மையான இந்திய கலை வடிவங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த இசைப்பள்ளிகளின் மாபெரும் முயற்சி இது! 

அரசன் நியூசிலாந்து சார்பாக மனதார வாழ்த்துகள்!

2022 நவராத்திரிக்காக அவர்கள் வழங்கியிருக்கும் அழகான காணொளியை கேட்டு ரசியுங்கள்!

-ஷீலா ரமணன்