Breaking News

மலையகத்தில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு

மலையகத்தில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு

மத்திய மலைநாட்டிலுள்ள பல தோட்டப் பகுதிகளில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளில் உள்ள பலர் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலைமைகளால் குறிப்பாக பொகவந்தலாவ, சாமிமலை, மஸ்கெலியா, சலங்கந்த, டயகம போன்ற தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் குழு, தமது பகுதியில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்தனர்.

தமது பிரதான உணவாக கோதுமை மாவு இருப்பதாக வும், கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி வியாபாரிகள் பலரிடம் வினவியபோது, ​கோதுமை மாவு கையிருப்பு கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.