Breaking News

சடலத்தில் உள்ள பூச்சிகளை வைத்து உயிரிழந்த நேரம் கணிப்பு...!!!

சடலத்தில் உள்ள பூச்சிகளை வைத்து உயிரிழந்த நேரம் கணிப்பு...!!!

துபாயில் தடய அறிவியல் ஆய்வு நிபுணர்கள் இறந்தவரின் உடலில் தோன்றிய பூச்சி மற்றும் புழுக்களை வைத்து உயிரிழந்த நேரத்தை துல்லியமாக கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து துபாய் காவல்துறையின் தடய அறிவியல் மற்றும் குற்றவியல் பொது பிரிவின் இயக்குனர் அகமது ஈத் அல் மன்சூரி அளித்த செவ்வியில் கூறியதாவது

பொதுவாக குற்றவியல் வழக்குகளில் தடய அறிவியல் பிரிவின் அறிக்கை மிகவும் முக்கியமான சாட்சியமாக உள்ளது.

இதில் கொலை வழக்கு அல்லது விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டு அது குறித்து எழும் சந்தேகங்களுக்கு தடய அறிவியலே முக்கியமான வழிகாட்டியாக உள்ளது.

குறிப்பாக கொலை வழக்குகளில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்தவர்களின் உடல் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் அவர் எப்போது இறந்தார்? இறந்து எத்தனை மணி நேரம் அல்லது நாட்களாகி இருக்கும்? என்பதை அறிவது குற்றப்புலனாய்வு விசாரணையில் முக்கிய கட்டமாகும்.

இதில் ஒரு உடல் அல்லது உடல் பாகம் வீசப்பட்டு இருக்கும் பகுதியில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை ஆய்வு செய்தால் மிக துல்லியமாக கொலை செய்யப்பட்ட அல்லது ஒரு நபர் இறந்து எத்தனை நாட்கள் ஆனது என்பதை கண்டுபிடித்து விட முடியும்.

பொதுவாக இறந்த உடல் பாகங்களில் முதலில் லார்வா எனப்படும் சிறிய புழுக்கள் தோன்றுகின்றன. பிறகு அந்த லார்வாக்கள் வளர்ந்து பூச்சிகளாக மாறிவிடும்.

இதுபோல குறிப்பிட்ட பூச்சியின் லார்வா(புழு) அல்லது முழு உருபெற்ற பூச்சியை ஆய்வு செய்தால் அது தோன்றி எத்தனை நாட்களாகி இருக்கும் என்பது தெரிய வரும்.

அதேபோல் ஆய்வகத்தில் இதற்கு முன்னோட்டமாக செய்யப்பட்ட சோதனையில் எலி போன்ற உயிரினங்கள் இறந்து அதில் தோன்றும் பூச்சி மற்றும் புழுக்களை ஆய்வு செய்து அதில் துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது.

துபாய் காவல்துறை தடய அறிவியல் பிரிவு நிபுணர்கள் முக்கிய வழக்கு ஒன்றில் பூச்சிகள் மற்றும் புழுக்களை வைத்து தீர்வு கண்டுள்ளனர்.

இதில் யாரும் வசிக்காத கட்டிடத்தில் மர்மான முறையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் இருந்து அவர் இறந்து 63 மணி 30  நிமிடம் ஆனதாக துல்லியமாக முடிவுகளை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.