Breaking News

“கிளிமாஞ்சாரோ” பாடல் படமாக்கப்பட்ட மச்சு பிச்சு மலை நிலச்சரிவால் பாதிப்பு...!!!

“கிளிமாஞ்சாரோ” பாடல் படமாக்கப்பட்ட மச்சு பிச்சு மலை  நிலச்சரிவால் பாதிப்பு...!!!

வெள்ள மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சுவிற்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் மலைப்பகுதிகள் மற்றும் மழைக்காடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

அங்குள்ள ‘மச்சு பிச்சு’ என்ற 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மலை நகரம் உலகப் புகழ் பெற்றது.

இதைக் காண உலகெங்கிலும் இருந்து வருடந்தோறும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பெரு நாட்டிற்கு வருகை தருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தில் முதல் முறையாக இந்த மச்சு பிச்சு மலைகள் இடம்பெற்றன. அந்த படத்தில் வரும் ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மலைப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மச்சு பிச்சு செல்லும் பாதை முழுவதுமாக தடைப்பட்டுள்ளது.

பல பகுதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் சேற்றால் நிரம்பியுள்ளன.

மேலும் அங்குள்ள அல்கமேயோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மச்சு பிச்சு பகுதிக்கு செல்லும் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து மச்சு பிச்சு செல்வதற்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக பெரு அரசு அறிவித்துள்ளது.