சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்தில் பணிபுரிந்த 15 வயது சிறுமி கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது....
15 வயதான குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.
சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்.
அத்துடன், சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.