Breaking News

அதை சொன்ன போது பைத்தியம் என நினைத்தார்கள் - அன்றே கணித்த எலான் மஸ்க்..!!

அதை சொன்ன போது பைத்தியம் என நினைத்தார்கள் - அன்றே கணித்த எலான் மஸ்க்..!!

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் Tesla, SpaceX , Starlink, X(டிவிட்டர்) போன்ற பல்வேறு நிறுவனங்களை நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

இவரே தற்போது உலக பணக்காரார்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். 

இந்நிலையில் அவர் 26 ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அவரே பகிர்ந்து "தெளிவான கணிப்பைக் கூறியதற்காக அவர்கள் என்னை பைத்தியம் என்று நினைத்தார்கள்" என கூறியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்று எலான் மஸ்க் பேசியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் கூறியபடியே தற்போதைய உலகம் இயங்கி வருகிறது. 

இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "இணையம் அனைத்து ஊடகங்களுக்குமான சிறப்பு தொகுப்பாக இருக்கும். ஒளிபரப்பு, விவாதங்கள் வானொலி என தேவையான அனைத்து ஊடக வடிவங்களையும் ஒருவர் இணையத்தில் அணுக முடியும்.

வானொலி, இதழ் அல்லது தொலைக்காட்சி என எதுவாக இருந்தாலும்,எதைப் பார்க்கலாம், எப்போது பார்ப்பது என்பதை மக்களே முடிவு செய்துகொள்வார்கள். இணையம் அனைத்து பாரம்பரிய ஊடகங்களிலும் புரட்சியை உருவாக்கும்" என பேசியிருந்தார். 

அவர் சொன்னதை போலவே இன்று அனைத்தையும் இணையத்தில் காண முடிகிறது. இணையத்தின் எதிர்கால ஆதிக்கத்தை 26 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் என்ற இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

100க்கு மேற்பட்ட நாடுகளில் சேட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கி வரும் ஸ்டார்லிங்க் விரைவில் ஜியோ, ஏர்டெலுக்கு போட்டியாக இந்தியாவிலும் கால் பதிக்க உள்ளது.

இதே போல் AI பங்களிப்புடன் உருவாகும் எதிர்கால உலகம் குறித்தும் சமீபத்தில் எலான் மஸ்க் பேசியிருந்தார். "பாரம்பரிய வேலைகள் அனைத்தையும் AI மாற்றிவிடும். பொருட்களை உற்பத்தி செய்வதையும் சேவைகள் வழங்குவதையும் ரோபோக்களே பார்த்துக்கொள்ளும்.

யாருக்கும் எந்த வேலையும் இருக்காது. வேலை செய்வது கட்டாயமாக இல்லாமல் விருப்பமாக மாறும். UHI கான்செப்ட் படி மக்களுக்கு அரசாங்கங்களே நிலையான வருமானத்தை வழங்கும்" எனத் தெரிவித்தார்.