நியூசிலாந்து அரசுக்குச் சொந்தமான சிறார் இல்லங்கள், மனநல மருத்துவமனைகளில் துன்புறுத்தப்பட்டோரிடம் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் இன்று பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இது, இதற்கு முன்பு நிகழ்ந்திடாத வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று கூறப்படுகிறது.
நியூசிலாந்து அரசாங்கத்துக்குச் சொந்தமான பராமரிப்பு நிலையங்களில் கடந்த பல ஆண்டுகளாக ஏறத்தாழ 200,000 பேர் துன்புறுத்தப்பட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
தேவாலயங்களைப் பராமரித்தவர்கள் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தங்கள் பிள்ளைகளைத் தத்துக்கொடுக்க தாய்மார்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் நோயாளிகள் சிலர் படுக்கையில் கட்டப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் துன்புறுத்தல்கள் குறித்து எழுந்த புகார்களை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் ஆனாலும், அவை சார்பாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகப் பிரதமர் லக்சன் கூறினார்.
“புகார் அளிக்க முன்வந்தோரை யாரும் நம்பவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீண்டகாலமாகப் பல துன்புறுத்தல்களுக்கு ஆளான பிறகு, சிலருக்கு நான் கூறும் வார்த்தைகள் ஆறுதல் அளிக்காமல் போகலாம். ஆனால் என்றைக்காவது ஒருநாள் அது உங்களுக்கு மனநிம்மதியைத் தரும் என நம்புகிறேன்,” என்றார் பிரதமர் லக்சன்.
கற்பனை செய்துகூட பார்க்க முடியாத வேதனைக்குப் பலர் ஆளானதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
இனரீதியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்தது.
நியூசிலாந்தின் பழங்குடியினரான மௌரி இனத்தவர்கள் குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் லக்சன் உறுதி அளித்துள்ளார்.