நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் இலங்கையை 5 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு இரு போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளனர்.
தம்புள்ளையில் நேற்று (10) இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நியூசிலாந்திற்கு வழங்கினர்.
அதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து வீரர்கள் தடுமாற்றத்தினை எதிர்கொண்டதோடு 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 30 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மதீஷ பதிரண 3 விக்கெட்டுக்களையும் சாய்க்க நுவான் துஷார 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 109 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கை அடைய போராடிய போதும் மோசமான துடுப்பாட்டம் காரணமாக 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வி அடைந்தனர்.
நியூசிலாந்து தரப்பின் வெற்றியினை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் லொக்கி பெர்குஸன் ஹட்ரிக்கோடு 3 விக்கெட்டுக்களையும், கிளன் பிலிப்ஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இலங்கையின் துடுப்பாட்டத்தில் தனியொருவராக போராடிய பெதும் நிஸ்ஸங்க 51 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்ற போதும் அது வீணானது.
போட்டியின் ஆட்டநாயகனாக லொக்கி பெர்குஸன் தெரிவாக, தொடர் நாயகன் விருதை வனிந்து ஹஸரங்க பெற்றுச் சென்றார்.
இனி இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புதன்கிழமை (13) நடைபெறுகின்றது.