குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடித்தக்கது.
ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அலசும் போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் கீழ்தளத்தில் அந்த காவலாளி தங்கியுள்ளார். அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள்.
தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பதை அந்த நாட்டின் தடயவியல் துறை உறுதி செய்துள்ளது. கேரளா, தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக குவைத் தடயவியல் துறை தகவல். குவைத் முடி இளவரசர் ஷேக் சபா, குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தீ விபத்தில் தொடர்புடைய இந்தியர்களின் குடும்பத்தினருக்காக 965-65505246 என்ற ஹெல்ப்லைன் எண்ணை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.