Breaking News

வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!!

வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!!

இந்தியா: தமிழ்நாடு

வங்கக்கடலில் கடந்த 27 ஆம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்ட இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.

மேலும் இப்புயலானது தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பாபட்லா பகுதியில் தீவிர புயலாக நேற்று மாலை கரையை கடந்தது.  புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.  இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.

மேலும், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு வருகிறார். சென்னையில் தரமணி  மற்றும் துரைப்பாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.  இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.