Breaking News

சீன அதிபரை சர்வாதிகாரி என விமர்சித்த ஜோ பைடன் - சர்ச்சையில் முடிந்த சந்திப்பு...!!

சீன அதிபரை சர்வாதிகாரி என விமர்சித்த ஜோ பைடன் - சர்ச்சையில் முடிந்த சந்திப்பு...!!

அமெரிக்கா - சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே தோழமையாக இல்லை. அதிலும் கடந்த பெப்ரவரி மாதம், சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்து பேசியது, இரு நாட்டு உறவை மேலும் கசப்பாக்கியது.

அவற்றுடன் ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம், அமெரிக்கா மற்றும் சீனாவை எதிர் எதிர் துருவங்களில் நிற்பதற்கான சூழல்களை ஏற்படுத்தின. இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். இருநாட்டு அதிபர்களும் சொகுசு கார் குறித்து யதார்த்தமாக கலந்துரையாடினர். சீனாவில் தயாரிக்கப்பட்ட தனது ஹோங்கி லிமோசைன் காரை பைடனிடம் ஜி ஜின்பிங் காட்டினார். தனது “பீஸ்ட்” வாகனத்தை போன்று அற்புதமாக உள்ளது என்று ஜோ பைடனும் பாராட்டினார்.
 
இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற (APEC) ஏபெக் பொருளாதார உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, கலிபோர்னியா சென்ற ஜி ஜின்பிங், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்து அரசு ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அசாதாரண சூழல், தைவான் பிரச்னை, காலநிலை மாற்றம், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாட்டு ராணுவ உறவுகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சுமூகமாக சென்று கொண்டிருந்த சீன அதிபரின் பயணம், தொழிலதிபர்கள் மாநாட்டில் திடீர் டிவிஸ்ட் அடித்தது. கலிபோர்னியாவில் அந்நாட்டு தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங், அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடாது என்று கூறினார். அதனை அமெரிக்காவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் சீன அதிபருடனான சந்திப்பு குறித்து ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, அவரிடம் சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத் தான் கருதுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி” என்று கூறினார். மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, சீன அரசாங்கம் முற்றிலும் மாறுபட்டது என்றார்..

இவ்வாறு, அமெரிக்கா - சீன அதிபர்களின் சந்திப்பு சர்ச்சைகளுடனே நிறைவடைந்துள்ளது. ஒரே சந்திப்பில் ஒட்டுமொத்த முரண்களுக்கும் தீர்வு காண முடியாது என்றாலும், இரண்டு வல்லரசுகளின் அதிபர்கள் கை குலுக்கியதை ஆக்கப்பூர்வமான தொடக்கமாகாவே பார்க்கலாம்.