Breaking News

அதிகாலையில் 25 பேரின் உயிரை குடித்த தீ விபத்து - சீனாவில் ஷாக்...!!

அதிகாலையில் 25 பேரின் உயிரை குடித்த தீ விபத்து - சீனாவில் ஷாக்...!!

வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் லுலியாங் நகரில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் நேற்று காலை 7 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீயில் தப்பிக்க கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் நாலாபுறமும் ஓடியுள்ளனர். சிலர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்துள்ளனர். இப்படியாக சுமார் 25 பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இது யோங்ஜு நிலக்கரி தொழில் கூட்டு கட்டிடத்தில் நடந்திருக்கிறது என்றும், இக்கட்டிடத்தில் தீ விபத்திலிருந்து தப்பிக்க போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிய வந்திருக்கிறது.

ஷாங்க்சி மாகாணம் என்பது சீனாவின் மிக அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணமாகும். சீனா விடுதலையடைந்ததிலிருந்து நிலக்கரி உற்பத்தி இந்த மாகாணத்தில் நடந்து வருகிறது. அப்போதைய காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது வரை சீரமைக்கப்படாமல் இருக்கிறது. அல்லது சிறு சிறு வேலைப்பாடுகள் செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பதற்காக எந்த வசதியும் இதில் செய்யப்படவில்லை. மாகாணம் முழுவதும் உள்ள கட்டிடங்களில் இதே நிலைமைதான் நீடிக்கிறது. இதுவே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும் கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இன்னும் தொடர்கிறது என்று அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன.