Breaking News

பாஜக இன்றி அதிமுகவால் வெற்றி பெற முடியாது - ஓபிஎஸ்..!!

பாஜக இன்றி அதிமுகவால் வெற்றி பெற முடியாது - ஓபிஎஸ்..!!

இந்தியா: தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளராக மாறி அக்கட்சியை முழுவதுமாக தன்வசம் கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற மற்ற தலைவர்களையும், நிர்வாகிகளையும் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வேன், ஆனால்,  ஓ பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால், தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட தலைவர்களை நீக்கியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மீது முக்குலத்தோர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ் - தினகரன் இணைந்து தேர்தலை சந்தித்தால், அவர்களால் வெற்றி பெற முடியாது என்றாலும் கூட, அவர்கள் பிரிக்கும் ஓட்டுகள் அனைத்தும் அதிமுகவின் வாக்குகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படி அதிமுகவின் வாக்குவங்கியில் பெரிய ஓட்டை விழுவது தெரிந்திருந்தும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே, ஓபிஎஸும், தினகரனும் அதிமுகவில் இணைவதற்காக திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஓபிஎஸ் பல முறை எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், நான் எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாக பரவும் செய்திகள் வடிகட்டின பொய். அவருக்கு தூது அனுப்ப எனக்கு அவசியம் இல்லை. இன்றைய சூழலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடியும். அதுவும், ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம். இல்லையென்றால், யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது. நானும், டிடிவி தினகரனும் ஓரணியில் தான் இருக்கிறோம். எங்களுடன் இணைவது குறித்து சசிகலா தான் முடிவு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் கூறினார்.