தீபாவளி ரிலீசாக வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் தொடர்ந்து திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. இந்நிலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி தள்ளியுள்ளது படக்குழுவினர் மத்தியில் குதுகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பாராட்டி தள்ளி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாகுகிறது. எஸ்.ஜே. சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குனச்சித்திரன் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.
திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. திலீப் சுப்ராயனின் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலை சிறந்த இசையமைப்பாளர் என்பதை இப்படத்தில் நிரூபித்து இருக்கிறார். இப்படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுக்கள்.
படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை. வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்கள் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விதுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம். இப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைத்தட்ட வைக்கிறார். பிரம்மிக்க வைக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். 'i am proud of you கார்த்திக் சுப்புராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் and team'. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
இந்தப்படத்துடன் வெளியான 'ஜப்பான்' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் 'ஜிகர்தண்டா' படத்திற்கு திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருவது படத்திற்கான மைலேஜை அதிகரித்துள்ளது.