இந்தியா: தமிழ்நாடு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அவருக்கு இருக்கும் நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, கரூர், கோவையில் அதிக அளவில் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ரமேஸ்வரம்பட்டி வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள சகோதரர் அசோக் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடக்கிறது.
மொத்தம் 40 - 50க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை பெரும்பான்மைக்கும் அடுத்த 3 நாட்களுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கொங்கு மண்டலங்களை குறி வைத்து சோதனை நடத்தப்படுகிறது.