Breaking News

ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கம் - கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த காங்கிரஸ்...!!

ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கம் - கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த காங்கிரஸ்...!!

இந்தியா: தமிழ்நாடு

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் சட்டசபையில் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டசபையின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டசபையை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அதேபோல் ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிரான பதாகைகளுடனும் வந்து செய்தியாளர்களை சந்தித்து செல்வப்பெருந்தகை கூறுகையில், தடையாணை வாங்கி இருந்த வழக்கை எடுத்து நடத்தி, 24 நாட்களுக்குள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்று எங்கும் காணாத தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு போட்டவரே தடை வாங்குகிறார். தீர்ப்பு வந்து 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்காக தொடர்ந்து போராடுவோம். சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி இருக்கிறோம். இது முழுக்க முழுக்க பாஜக, நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டம் என்று தெரிவித்தார்.