Breaking News

தமிழக அரசை பற்றி அண்ணாமலை ஓலமிடுவது ஏன்? - சீறும் செல்வப்பெருந்தகை...!!

தமிழக அரசை பற்றி அண்ணாமலை ஓலமிடுவது ஏன்? - சீறும் செல்வப்பெருந்தகை...!!

இந்தியா: தமிழ்நாடு

கர்நாடகா பா.ஜ.க. அரசை பற்றி விமர்சிக்க துப்பில்லாமல், தமிழ்நாடு அரசை பற்றி அரசியல் ஓலம் போடுவது ஏன் என தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு...

பா.ஜ.க.வினர் நடத்திய குதிரை பேரத்தின் மூலம் பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. பசவராஜ் பொம்மையின் அரசு 40 சதவீத கமிஷன் பெற்று ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை இழந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக கர்நாடகா பா.ஜ.க. அரசு மீது ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் அதிகரித்தே வருகின்றன.

கர்நாடகா பா.ஜ.க. எம்.எல்.ஏ மதல் விருப்பக்ஷாவின் மகன் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகச் சிக்கியதை தொடர்ந்து, அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் பா.ஜ.க சார்பில் பெங்களுரு ஆசிரியர்கள் தொகுதியிலிருந்து மேலவை உறுப்பினராகக் கடந்த ஆண்டு பதவி ஏற்றவர் புட்டண்ணா. இவருக்கான மேலவை பதவிக்காலம் 4 வருடங்கள் மீதமுள்ள நிலையில் அவர் தனது பதவியை கடந்த 9 ஆம் தேதியின்று ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தவர், 'மக்களுக்கு பணியாற்ற பா.ஜ.கவில் இணைந்தேன். ஆனால் தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் பா.ஜ.கபோல் ஒரு ஊழல் அரசைக் கண்டதில்லை. பா.ஜ.க அரசில் எந்த மக்கள் பணியும் செய்ய முடியவில்லை' என குற்றம்சாட்டியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டுக் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு இணைப்பொறுப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கர்நாடகா பா.ஜ.க. அரசின் அவலங்கள் பற்றி நன்கு தெரிந்தும்கூட, கர்நாடகா அரசை ஏன் விமர்சிக்கவில்லை.

பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சிக்கவில்லை. கர்நாடகா பா.ஜ.க. அரசை பற்றி விமர்சிக்க துப்பில்லாமல், தமிழ்நாட்டில் நன்கு ஆட்சி நடத்தி வரும், தமிழ்நாட்டு அரசைப் பற்றி அரசியல் ஓலம் போடுவது ஏன்? இவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசு பற்றி கருத்துக் கூற, எந்த யோக்கியதையும், அருகதையும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.