Breaking News

பிரேக்-அப் பிரச்னையை தீர்க்க 6.4 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு - நியூசிலாந்து அரசின் சூப்பர் திட்டம்...!!

பிரேக்-அப் பிரச்னையை தீர்க்க 6.4 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு - நியூசிலாந்து அரசின் சூப்பர் திட்டம்...!!

இந்த உலகம் இருக்கும் வரை காதல் இருக்கும். காதல் இருக்கும் வரை காதல் தோல்விகளும் இருக்கத்தானே செய்யும்.

இதனிடையே காதல் தோல்வியில் இருக்கும் இளைஞர்கள் மிக எளிதாக போதை பொருளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

இதிலிருந்து மீண்டு வர நண்பர்கள், பெற்றோர்கள் உதவ வேண்டும். நியூசிலாந்து ஒருபடி மேலே போய் இந்த உதவியை செய்ய அரசே முன்வந்திருக்கிறது.

நியூசிலாந்து அரசு இதற்கான பிரசாரத்தை 'லவ் பெட்டர்' என்கிற தலைப்பில் மேற்கொண்டிருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

இதில் அனுபவமிக்க நபர்களை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் பேச வைக்கிறோம். அவர்களும் காதல் தோல்விகளை கடந்துதான் வந்திருப்பார்கள். ஆனால் போதை பொருட்களுக்கு அடிமையாகியிருக்க மாட்டார்கள். எனவே இவர்கள் கொடுக்கும் நம்பிக்கை, அனுபவ பகிர்வு காதல் தோல்வியில் இருக்கும் இளைஞர்களை மீட்டு கொண்டுவர நிச்சயம் உதவும்.

காதல் தோல்வியில் இருப்பவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவார்கள் என்றாலும், மற்றொருபுறம் குடும்பத்திற்கும் அவர்களுக்கும் இடையேயான உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படும்.

இது குறித்தும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே எங்களுடைய இந்த 'லவ் பெட்டர்' பிரசாரம் பெரிய அளவில் அவர்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம். எங்கள் திட்டத்தின்படி இந்த பிரசாரம் 3 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்படும்.

இதற்காக 6.4 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மொத்த திட்டங்களையும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது.

சுமார் 1,200 பேர் எங்களிடம் காதல் தோல்வியிலிருந்து மீண்டு வர உதவி கோரினார்கள்.

ஏற்கெனவே நியூசிலாந்தில் பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் எங்களிடம் கோரிக்கை வைத்தது எங்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகதான் பார்க்கிறோம். நாங்கள் திட்டமிட்டபடி சரியாக அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் எதிர்கால நியூசிலாந்தின் வரலாறு மாற்றியமைக்கப்படும். எங்களது நாட்டில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட 16-24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்/இளம்பெண்களில் சுமார் 87 சதவிகிதம் பேர் சமூகத்திற்கு புறம்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பது அரசின் கடமை. அதனால்தான் இந்த திட்டத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். காதலிக்கும்போது இருவரின் பரஸ்பர அன்பு எப்படி முக்கியமானதோ அதேபோல காதல் பிரிவிலும் இருவரின் ஒத்துழைப்பும் அவசியமானதாகும் என்று கூறப்பட்டுள்ளது.