இந்தியா: தமிழ்நாடு
குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் (12) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று முன்தினம் (12.06.2024) தீ விபத்து ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடையத் தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.